Thursday, April 3, 2008

நோயாளி வுழு செய்வது எப்படி?


தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வது நோயாளி மீது கடமையாகும். சிறு தொடக்கு எனில் வுழு செய்ய வேண்டும். பெருந் தொடக்கு எனில் குளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

நோயின் காரணமாக தண்ணீரைப் பயன்படுத்த முடியவில்லை என்றாரோ அல்லது குணமடைய தாமதமாகும் எனும் அச்சத்தினால் தண்ணீரால் சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலோ தயம்மும் செய்ய வேண்டும்.

தயம்மும் செய்யும் முறை யாதெனில்: சுத்தமான தரையை இரண்டு கைகளால் ஒரு முறை அடித்து அவைகளால் முகம் முழுவதையும் தடவ வேண்டும். பிறகு இரு மணிக்கட்டுகளையும் ஒன்றைக் கொண்டு மற்றொன்றைத் தடவ வேண்டும்.

சுயமாக சுத்தத்தை அவரால் மேற்கொள்ள அவரால் முடியவில்லை என்றால் வேறொருவர் அவருக்கு உளூ அல்லது தயம்மும் செய்து வைப்பார்.

சுத்தம் செய்ய வேண்டிய பகுதிகள் சிலவற்றில் காயம் இருந்தால் தண்ணீரால் அதைக் கழுவ வேண்டும். தண்ணீரால் கழுவுவது தீங்கு அளிக்கும் என்றிருந்தால் கையை தண்ணீரில் நனைத்து காயத்தின் மீது தடவ வேண்டும். அப்படிச் செய்வதனால் தீங்கு ஏற்படும் என்றிருந்தால் அதற்குப் பகரமாக தயம்மும் செய்யலாம்.

சுத்தம் செய்ய வேண்டிய பகுதிகளில் சிலவற்றில் முறிவு ஏற்பட்டு துணி வைத்தோ அல்லது பட்டை வைத்தோ கட்டப்பட்டிருந்தால் அதைக் கழுவுவதற்குப் பதிலாக தண்ணீரால் தடவ வேண்டும். அப்படித் தடவுவது கழுவுவதற்குப் பகரமாகும் என்பதால் தயம்மும் செய்ய வேண்டிய தேவையில்லை.

மண் சுவர் மீதோ அல்லது புழுதி படிந்துள்ள சுத்தமான பொருள் மீதோ தயம்மும் செய்வது கூடும். பெயின்ட் போன்ற மண் சாராத பொருளால் சுவர் பூசப்பட்டிருந்தால் அதன் மீது புழுதி படிந்திருந்தால் மட்டும் தயம்மும் செய்யலாம்.

மண் சுவரிலோ அல்லது புழுதி படிந்த ஏதேனும் ஒரு பொருளிலோ தயம்மும் செய்ய முடியவில்லை என்றால் ஒரு பாத்திரத்தில் அல்லது கைத்துண்டில் மண்ணை வைத்து அதில் தயம்மும் செய்யலாம்.

அசுத்தங்களை நீக்கி தன் உடலை சுத்தம் செய்வது நோயாளி மீது கடமையாகும். அவரால் இயலவில்லையானால் அப்படியே தொழலாம். அத்தொழுகை நிறைவேறி விடும். திருப்பித்தொழ வேண்டியதில்லை.

சுத்தமான ஆடைகளோடு தொழுவது நோயாளி மீது கடமையாகும். அவருடைய ஆடைகள் அசுத்தமாகி விட்டால் அவற்றைத் துவைப்பதோ அல்லது அவற்றைக் கழைந்து விட்டு சுத்தமான ஆடைகள் அணிவது அவர் மீது கடமையாகும். அது சாத்தியமில்லையானால் அப்படியே தொழலாம். அத்தொழுகை நிறைவேறி விடும். திருப்பித்தொழ வேண்டியதில்லை.

சுத்தமான இடத்தின் மீது தான் நோயாளி தொழ வேண்டும். அவ்விடம் அசுத்தமாகி விட்டால் அதைக் கழுவி சுத்தம் செய்வது அல்லது அதை மாற்றிவிட்டு சுத்தமான பொருளைக் கொண்டு வருவது அல்லது சுத்தமான விரிப்பை அதன் மீது விரிக்க வேண்டும். அவைகள் அனைத்தும் சாத்தியப்படாத பட்சத்தில் அப்படியே தொழலாம். அவரது தொழுகை நிறைவேறிவிடும். திருப்பித்தொழ வேண்டியதில்லை.

சுத்தம் செய்யவில்லை என்பதால் தொழுகையை நேரப்படி தொழாமல் பிற்படுத்துவது நோயாளிக்குக் கூடாது. மாறாக முடிந்தவரை சுத்தத்தைச் செய்து கொண்டு நேரத்துக்கு தொழ வேண்டும். அவரது உடலிலோ உடையிலோ இடத்திலோ அசுத்தம் இருந்து அதைச் சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலும் சரியே!

No comments: