Saturday, November 17, 2012

சீரழியும் மாணவர்கள்...

எஸ். ஜெய்சங்கர்

youths crimeஉல்லாச வாழ்வுக்காக குற்றச் செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றனர் மாணவர்கள். அதிலும் இச்செயலில் ஈடுபடுவது பொறியியல், மருத்துவம் படித்த மாணவர்கள் என்பதுதான் வேதனை.

புதுச்சேரியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததாக, பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் வீட்டிலிருந்து 10 நாட்டு வெடிகுண்டுகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இப்போது, செல்போன் கடைக்குள் புகுந்து அங்கிருந்த 100-க்கும் அதிகமான செல்போன்களைத் திருடியதாக 3 பொறியியல் மாணவர்களைப் புதுச்சேரி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இதில், ஒருவர் தமிழகக் காவல்துறை பெண் உதவி ஆய்வாளரின் மகன்.

பெண்கள் விடுதியில் தங்கிப்படித்த மாணவி ஒருவர், பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். அவர் சக மாணவியையும் அதில் இழுத்திருக்கிறார். இந்த மாணவியைக் கண்டுபிடித்த விடுதி நிர்வாகம், எச்சரித்து வெளியே அனுப்பியது. இவரும் பொறியியல் பிரிவு மாணவி.

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த மாணவருக்கு, அப்பகுதியில் இருந்த ரவுடிகளோடு தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களோடு சேர்ந்து மாமூல் வசூலிப்பது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றுக்குக் காரணம், அதன் மூலம் கிடைக்கும் பணம்.

மாணவர்களின் பெற்றோர் கொடுக்கும் பணம் கைச்செலவுக்குக்கூட காணாத நிலையில், பிற மாணவர்களைப் போல உயர் ரக செல்போன், வாகனம், உடைகள், லேப்-டாப் வாங்கவும், சக மாணவர்களுக்குச் செலவழிக்கவும் பணம் தேவை.

"உல்லாச' வாழ்க்கைக்குப் பெற்றோர் எப்போதும் பணம் தருவதில்லை. அதனாலேயே, செல்போன் கடைக்குள் புகுந்து திருடியிருக்கிறார்கள் என்கிறார் காவல்துறை அதிகாரி.

இளைஞர்களோடு உல்லாச வாழ்க்கை, அதற்காகக் கிடைக்கும் பணம் என அனுபவிக்கத் தேவையானதை, பாலியல் தொழில் தருகிறது. அதனாலேயே சில மாணவியர் தடம் மாறுகிறார்கள் என்கிறார் விடுதிக் காப்பாளர்.

"சக மாணவர்களோடு பழகும்போது ஏற்படும் தாழ்வு மனப்பான்மையே, மாணவ, மாணவியரை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறது. இதற்குக் காரணம், சமூக ஏற்றத் தாழ்வுகளே.

"இதில், மாணவ, மாணவியரின் ஆசையைத் தூண்டுவதில், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பலவற்றின் பங்கும் உண்டு. இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியடையும் நிலையில் இன்றைய மாணவர்கள் இல்லை.

"பிற மாணவர்கள் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருள்களால் தான் ஈர்க்கப்படுவதுபோல, தானும் விலை உயர்ந்த பொருள்களை வைத்திருப்பது பிறரது கவனத்தை ஈர்க்கும். அதற்காக, எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மாணவ, மாணவியரை இதுபோன்ற தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது' என்கிறார் உளவியல் நிபுணர்.

பணத்தின் தேவையை, அதைச் செலவிடும் முறையை இளம் வயதிலேயே மாணவர்களுக்குக் கற்றுத்தர பெற்றோர் மறக்கிறார்கள். அதன் விளைவு, படிக்கும்போதே, உல்லாச வாழ்க்கைக்கு அந்தப் பணம் அழைத்துச் செல்கிறது. அது போதாத போதுதான், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

படிக்கும்போதே, பகுதி நேர வேலை செய்து கைச்செலவுக்குப் பணம் சம்பாதிப்பதன் மூலம், அதன் மதிப்பு மாணவருக்குப் புரியும்.

ஆனால், பிள்ளைகளைப் பகுதிநேர பணி செய்யச் சொல்வது கெற்ரவத்துக்கு இழுக்கு, அவர்கள் முழு நேரத்தையும் படிப்பில் செலவிட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுடைய பெற்றோரிடம் இருக்கிறது.

ஆனால், படிப்பைப் பாழ்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு சில மாணவர்கள் செயல்படுகிறார்கள். படித்து, தேர்ச்சி பெற்று வெளியே வந்தால், வேலை கிடைக்கும். அப்போது, சம்பாதித்து செலவு செய்யலாம் என்ற எண்ணம் மாணவர்களிடம் இல்லை. எதிர்காலத்தை மறந்து, இப்போதைக்கு செலவு செய்ய என்ன வழி என்று மட்டும் யோசிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

தங்களது பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்புவதோடு தங்களது கடமை முடிந்தது எனப் பெற்றோர் இருந்தால், இதுபோன்ற தவறான பாதைக்கு -ஆண்களும் சரி, பெண்களும் சரி - பயணிக்க இன்றைய சூழலில் வாய்ப்புகள் மிக அதிகம். சந்தேகப்படுவதும் அன்றாடம் கண்காணிப்பதும் அநாகரீகம் என்றாலும் மாதத்துக்கு ஒரு முறையாவது மகன் அல்லது மகள் படிக்கும் விடுதிக்கும் கல்லூரிக்கும் சென்று அவர் எப்படிப் படிக்கிறார், கல்லூரிக்கு ஒழுங்காக வருகிறாரா, அவருடைய நட்பு வட்டம் எப்படிப்பட்டது என்று விசாரிப்பது மிகமிக அவசியம்.

பெற்றோர் நம்மைத் தேடி எப்போது வருவார்கள், எங்கு வருவார்கள் என்று தெரியாமல் இருந்தாலே பல பிள்ளைகள் ஊர் சுற்றுவதையும் தவறான இடங்களுக்குச் செல்வதையும் விட்டுவிடுவார்கள்.

பிள்ளைகள் விரும்பவில்லை என்பதற்காக அவர்களோடு பேசுவதைக்கூட தவிர்த்துவிடும் பெற்றோர் பலர் உண்டு. அது கூடாது. அவர்களுடன் நண்பர்களைப் போல பழக வேண்டும்.

அதே சமயம் படிப்பு காலத்தை வீணடித்து நல்ல நடத்தையைக் கைவிட்டுவிட்டால் ஆயுளுக்கும் துயரம்தான் என்பதை கண்டிப்பாக எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.

தினமணி

No comments: