Thursday, November 8, 2012

பிரித்தானிய வைத்தியர்களின் ரோபோ மூலமான முதல் இருதய சத்திரசிகிச்சை வெற்றி!


By Kavinthan Shanmugarajah
2012-10-23 15:17:48

 
ரோபோவின் மூலம் இருதய சத்திரசிகிச்சையொன்றை வெற்றிகரமாக மேற்கொண்டு பிரித்தானிய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
'டாவின்சி' என்று பெயரிடப்பட்ட 4 கைகளைக் கொண்ட ரோபோ மூலம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சத்திரசிகிச்சையின் போது 'டாவின்சி' ஆனது வைத்தியர்களினால் ரிமோட் ஒன்றின் ஊடாகக் கட்டுப்படுத்தப்பட்டது.
மேலும் நோயாளியின் இதயத்தினை அதி துல்லியமான, முப்பரிமாண கெமராவின் ஊடாக வைத்தியர்கள் அவதானித்து வந்தனர்.
இருதய சத்திரசிகிச்சைகள் மார்புக்கூட்டைத் திறந்து செய்யப்படுவது வழமையாகவுள்ள நிலையில் இந்த அறுவைச்சிகிச்சைகள் ரோபோ கரங்களை நோயாளியின் விலா எலும்புகளுக்கிடையே செலுத்தி மேற்கொள்ளப்பட்டன.

உல்வர்ஹெம்டன் பகுதியில் அமைந்துள்ள நிவ் குரஸ் வைத்தியசாலையிலேயே இச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சிகிச்சைக்கு முகங்கொடுத்தவர் ஸ்டவுர்பிரிச்சைச் சேர்ந்த 22 வயதான பெண்ணொருவராவார்.
நடாலி ஜோன்ஸ் என்ற அப்பெண்ணின் இருதயத்தில் காணப்பட்ட 1.5 அங்குல துவாரம் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
இச்சத்திரசிகிச்சையானது சுமார் 9 மணித்தியாலங்கள் நீடித்தது.
ரோபோக்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சையானது வலி குறைவானதென்பதுடன், நோயாளிகள் சீக்கிரமாகக் குணமடைவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோபோ மூலமான இருதய சத்திரசிகிச்சைகள் சுவீடன் மற்றும் பின்லாந்தில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் பிரித்தானியாவில் ரோபோ மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் இருதய சத்திரசிகிச்சை இதுவாகும்.

No comments: