Thursday, November 15, 2012

தமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நான்கு பெண் குழந்தைகளை வழங்கியிருந்தான். ஸைனப், ருகையா, உம்மு குல்ஸும் ஆகிய மூவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே மரணித்து விட்டார்கள். கடைசி மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மட்டும் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை உயிரோடு இருந்தார்கள்.
 
தமது குடும்பத்து உறுப்பினர்களில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் முதலில் மரணிப்பார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

'என் குடும்பத்தார்களில் (நான் மரணித்த பின்) என்னை முதலில் வந்துசேர்பவர் நீ தான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். நூல் : காரி 3626, 3716, 4434

நபிகள் நாயகத்தின் மனைவியரிலும், அவர்களின் உறவினர்களிலும் அதிக வயதுடைய பலர் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சுமார் 25 வயதுடையவராகத் தான் இருந்தார்கள். மரணத்தை நெருங்கிய வயதுடையவராக அவர்கள் இருக்கவில்லை.

அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் மரணித்து ஆறாவது மாதத்தில் மரணத்தைத் தழுவினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை இச்செய்தியை இறைவன் அறிவித்துக் கொடுத்ததன் மூலம் மெய்ப்படுத்தினான்.

5 அம்மாரின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

ஆரம்ப கால முஸ்லிம்களில் யாஸிர், சுமய்யா தம்பதிகள் முக்கியமானவர்கள். சுமய்யா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காகஅவர்களது எஜமானனால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இஸ்லாத்திற்காக முதன் முதலில் உயிர் நீத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்கள்.

இவர்களின் புதல்வரான அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருக்கமான தோழராக இருந்தார்கள். மக்காவிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவராகத் திகழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் மதீனாவில் பள்ளிவாசல் ஒன்றை எழுப்பினார்கள். கூலி ஆட்கள் இன்றி தன்னார்வத் தொண்டர்களான நபித்தோழர்களே அப்பள்ளி வாசலைக் கட்டினார்கள். ஒவ்வொரு நபித்தோழரும் ஒவ்வொரு கல்லாகச் சுமந்து வந்தனர். அம்மார்(ரலி) அவர்கள் இரண்டிரண்டு கற்களாகச் சுமந்து வந்தார். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது தலையில் படிந்த புழுதியைத் துடைத்து விட்டனர். 'பாவம் அம்மார் இவரை வரம்பு மீறிய கூட்டத்தினர் கொலை செய்வார்கள்' என்று முன்னறிவிப்புச் செய்தார்கள். நூல் : புகாரி 2812, 447

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் அபூபக்கர் (ரலி), அவர்களுக்குப் பின் உமர் (ரலி), அவர்களுக்குப் பின்உஸ்மான் (ரலி) ஆட்சி புரிந்தனர். உஸ்மான் (ரலி) கொல்லப்பட்ட பின் அலீ (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றனர்.

இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது சிரியாவின் ஆளுநராக இருந்த முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கட்டுப்பாட்டில் வராமல் சிரியாவைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக அலீ (ரலி) அவர்களுக்கும், முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே பல்வேறு சண்டைகள் நிகழ்ந்தன. சிஃப்பீன் என்ற இடத்தில் இரு தரப்புப் படைகளும் மோதிக் கொண்ட யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கி.பி.657ஆம் ஆண்டு நடந்த இப்போரில் அம்மார் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் படையில் அங்கம் வகித்தனர். இப்போரில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

அலீ(ரலி) அவர்கள் அதிபராக இருக்கும் போது அவர்களுக்குக் கட்டுப்படாமல் முஆவியா (ரலி) அவர்கள் வரம்பு மீறினார்கள்.

வரம்பு மீறிய கூட்டம் அம்மாரைக் கொல்லும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அவர்கள் இறைவனின் தூதர் என்பது நிரூபணமானது.

6 ஸைனப் (ரலி) அவர்கள் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஸைனப் (ரலி) அவர்கள் முக்கியமானவர்கள். நபிகள் நாயகத்தின் மாமி மகளான ஸைனபை ஸைது எனும் அடிமைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். ஸைது அவர்களுக்கும் ஸைனப் அவர்களுக்கும் மனக் கசப்பு ஏற்பட்டதால் ஸைத் அவர்கள் ஸைனபை விவாகரத்துச் செய்தார்கள்.

இதன் பின்னர் அல்லாஹ்வே ஸைனபை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான். பார்க்க திருக்குர்ஆன் : 33:37

தமது மனைவியரில் யார் முதலில் மரணிப்பார்கள் என்பது பற்றிய பேச்சு வந்த போது 'உங்களில் நீளமான கைகளை உடையவரே முதலில் மரணிப்பார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒரு குச்சியின் மூலம் ஒவ்வொருவரின் கைகளையும் அளந்து பார்த்தனர். மற்றவர்களின் கைகளை விட ஸவ்தா (ரலி) அவர்களின் கைகளே நீளமாக இருந்தன. ஆனால் நபிகள் நாயகத்தின் மனைவியரில் ஸைனப் (ரலி) தான் முதலில் மரணித்தனர். 'தாரளமாக வாரி வழங்குபவர்' என்ற கருத்திலேயே 'கைகள் நீளமானவர்' என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியதை அவர்களின் மனைவியர் புரிந்து கொண்டார்கள். இந்த விபரம் புகாரி 1420 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அவர்களின் மனைவியரில் ஸைனப் அவர்கள் முதலில் மரணித்தார்கள்.

7 இரண்டு கலீஃபாக்களின் வீர மரணம் பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கை மரணம் அடைந்தார்கள்.
 
அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) அவர்கள் யூதன் ஒருவனால் கொல்லப்பட்டார்கள்.
 
அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உஸ்மான் (ரலி) அவர்கள் கலகக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
 
'உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் இயற்கை மரணத்தைத் தழுவ மாட்டார்கள். கொல்லப்பட்டு வீர மரணம் தான் அடைவார்கள்' என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் ஒரு முறை உஹத் மலை மீது ஏறினார்கள். அப்போது உஹத் மலை நடுங்கியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'உஹத் மலையேஅசையாமல் நில். உன் மீது ஓர் இறைத் தூதரும், ஒரு (சித்தீக்) உண்மையாளரும், வீர மரணம் அடையும் இருவரும் உள்ளனர்' என்று குறிப்பிட்டார்கள். நூல் புகாரி3675
 
உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்களும் இயற்கையாக மரணத்தைத் தழுவ மாட்டார்கள். எதிரிகளால் கொல்லப்பட்டே மரணிப்பார்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு இருவரும் எதிரிகளால் கொல்லப்பட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தாம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இந்த முன்னறிவிப்பும் அமைந்துள்ளது.

No comments: