Sunday, November 11, 2012

ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-06)


சரி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், பாரதீய ஜனதா போன்ற இந்து மதவெறி அமைப்புகள் மற்ற மதங்களைக் காட்டிலும் இஸ்லாத்தை குறிவைப்பதேன்?
இதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலில்: இந்து மதத்திற்கு அடுத்த பெரிய மதம் இஸ்லாம். சில மாவட்டங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் கூட உள்ளனர். அடுத்தது: வரலாற்று ரீதியாய் முஸ்லிம்களை எதிரியாக நிறுத்துவது எளிது. இதனை முன்பே விளக்கியுள்ளோம். கடைசியாக: இந்து மதத்தின் அடிப்படைகளான வருணாசிரமம், சாதிக் கொடுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு ஒரு சரியான சவாலாக விளங்குவது இஸ்லாம்தான். கிறிஸ்தவம் உட்படப் பிற மதங்கள் சாதிக்குப் பலியானபோது இஸ்லாம் மட்டுமே சாதியை ஒப்பீட்டு அளவில் வென்று நின்றது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் குரு கோல்வால்கர், “நான்கு வருணம் என்கிற நமது சமூக அமைப்பில் முதலில் தலையிட்ட மதம் இஸ்லாம்தான். இந்தியாவில் நுழைந்த இஸ்லாம் நமது சாதி வர்க்கச் சமூக அமைப்பிற்குச் சவாலாய் இருந்ததுஎன வயிறெரிந்தார். ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா போன்றவை வருணாசிரமத்தைப் பேணுபவை. இமாசலப் பிரதேச மாநிலப் பாரதிய ஜனதா அரசு பதவியிலிருந்த கொஞ்ச காலத்தில் செய்த காரியங்களிலொன்று மணலி என்ற இடத்தில் மனு கோயிலைப் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பித்தது. இவர்கள் இஸ்லாமை முதன்மை எதிரியாகக் கருதாமல் வேறென்ன செய்வார்கள்?
புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர்
இஸ்லாமியரது நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக முன்பு ஒருமுறை குறிப்பிட்டீர்கள். விளக்க முடியுமா?
முடியும். காசுமீர் விசயத்தில் அய்.நா. அவைத் தீர்மானத்திற்கு எதிராகவும் கொடுத்தவாக்குறுதியை மீறியும் இந்திய அரசு நடந்து கொள்வதிலிருந்து தொடங்கலாம். காஷ்மீர் மக்களின் தலைவரான ஷேக் அப்துல்லா கிட்டத்தட்ட இருபத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறை வைக்கப்பட்டிருந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்புறம், வெள்ளையராட்சியில் 1907முதல் முஸ்லிம்களுக்குத் தேர்தலிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளவர்களாக இருந்தும் சுதந்திரத்திற்குப் பின் அந்த உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

இதனை முன்னின்று செயல்படுத்தியவர் சர்தார் படேல். மொழிவாரி மாநிலங்கள் என்பது அடிப்படையில் ஒரு சனநாயகக் கோரிக்கைதான் என்றாலும் அதுகூட முஸ்லிம்களுக்குப் பாதிப் பாகவே முடிந்தது. வட நாட்டில்பெரும்பாலான முஸ்லிம்களின் தாய்மொழி உருது.ஆனாலும் உருது மொழிக்கான மாநிலம் ஏதுமில்லை. மாநில ஆட்சி மொழியாக அமையாத காரணத்தால் உருதுமொழி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் இல்லாமற் போயின. வி.பி.சிங் உத்திரப்பிரதேச முதல்வராக இருந்தபோது உருது மொழியை மாநிலத்தின் இரண்டாவது ஆட்சி மொழியாக்க மசோதா கொண்டு வந்தார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரும் கையெழுத்துப் போட்டுவிட்டார். எனினும் இந்திரா காந்தியின் ஆட்சியில் குடியரசுத் தலைவரின் கையெழுத்து அம்மசோதாவுக்கு மறுக்கப்பட்டது. எனவே இன்றுவரை அது சட்டமாக்கப்படவில்லை.

ஒருமுறை உருதைத் தாய்மொழியாகக் கொண்ட பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில்தான் உறுதிமொழி எடுப்போம் எனச் சொன்னபோது காங்கிரஸ் கட்சியினர் அதை அனுமதிக்கவில்லை. அடுத்து அலிகாரிலுள்ள முஸ்லிம் பல்கலைக்கழகம் முஸ்லிம்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் நிறுவனங்களில் ஒன்று. இதனுடைய சிறுபான்மை உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. இன்றுவரை இது நிறைவேற்றப்படாததோடு இருக்கிற அதிகாரங்களும் பறிக்கப்பட்டுள்ளன. 1971 தேர்தல் அறிக்கையிலேயே இது குறித்துக் காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் தேர்தலில் வென்றபின் 1972 மே மாதத்தில் பல்கலைக்ககழக அதிகாரங்கள் மேலும் குறுக்கப்பட்டன. பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமல்ல; கல்லூரிகளுக்கே சுயாட்சி கொடுக்க வேண்டும் என்பதல்லாம் அரசுக் கொள்கையாக இருக்கும் போது முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்கு மட்டும் இந்தக் கதி.

1947
ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு முதன் முதலில் முஸ்லிம்கள் தங்கள் கல்வி உரிமைக்காக வீதியில் இறங்கியது இந்தப் பிரச்சினைக்காகத்தான். (ஜூன் 72). இன்று, அதாவது பா.ஜ.க. ஆட்சியேறிய பிறகு நிலைமை மோசமாகியுள்ளது. சமீபத்தில் (2003 இறுதி) அலிகார் பல்கலைக்கழக உரிமைகளில் மீண்டும் தலையிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மதக் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் விரைவில் ஃபைசாபாத், வாரணாசி போன்ற இடங்களுக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பரவியது. இன்றுவரை இந்த வன்முறை தொடர்கதையாக இருக்கிறது. மேலும் மேலும் இந்திய அரசியல் வகுப்புவாத மயமாகி வருவது அவர்களின் வருந்தத்தக்க நிலையை இரட்டிப்பாக்கி விட்டது.

அரசியல் வகுப்புவாத மயமாகிறது என எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
ஆட்சியாளர்கள், அரசியல் கட்சிகள், அதிகாரிகள் எனப் பலரும் தங்களைப்க பெருமிதத்துடன் அடையாளம் கண்டு இயங்கும் நிலை எழுபதுகளின் பிற்பகுதியில் இந்திரா காந்தியின் காலத்தில் தொடங்கி இன்று உச்சமடைந்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் நேரு நடந்து கொண்டதற்கு எந்த நியாயமும் கற்பிக்க இயலாது என்றாலும் அடிப்படையில் அவரிடம் மதச்சார்பின்மைக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன. இந்தியா போன்ற ஒருநாடு மதச்சார்பின்மையைத்தான் கடைப்பிடிக்க முடீயும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்த அவர், முஸ்லிம்கள் தங்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதாத நிலையை ஏற்படுத்தும பொறுப்பு இந்துக்களிடம்தான் உள்ளது என்றார்.

இந்து மதவாதத்தைத் தொடர்ந்து கண்டித்து வந்தார். மாநில முதலமைச்சர்கள் மூன்று மதங்களுக்கு ஒருமுறை அரசுத்துறை, இராணுவம், காவல்துறை போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு உரிய பங்களிக்கப்படுகிறதா என்பது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்ப வேண்டும் என்பதை நடைமுறையாக்கியிருந்தார். எனினும் கோவிந்த வல்லபந்த் போன்ற மாநில முதல்வர்கள், சர்தார் படேல் போன்ற தனது சக அமைச்சர்கள் இந்து வகுப்புவாத உணர்வோடு செயல்பட்டபோது நேருவால் வருந்த மட்டுமே முடிந்தது. இந்தியாவின் முதலும் கடைசியுமான மதச்சார்பற்ற பிரதமர் என்று நேருவைச் சொல்லலாம். இந்திராவின் ஆட்சியில் நிலைமை மாறியது. உருது, முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகிய விவகாரங்களில் அவர் நடந்து கொண்டது பற்றி முன்பே குறிப்பிட்டேன். வெளிப்படையாக அவர்தன்னை இந்து மதவாதச் சக்திகளுடன் இணைத்துக் கொண்டார். விசுவ இந்து பரிஷத், அரித்துவாராவில் பாரதமாதா கோயில் கட்டிய போது (1983) அவரே நேரில் சென்று திறந்து வைத்தார்.

அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் (ஆகஸ்டு 82), “ஏராளமான அராபியப் பணம் இந்தியாவிற்கு வருகிறது. தாழ்த்தப்பட்டவர்களை மதம் மாற்றப் பெரு முயற்சிகள் செய்யப்படுகின்றனஎன்றார். ஷேக் அப்துல்லா தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து முறையிட வந்தபோது (ஆக. 73) முஸ்லிம்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிப்பதை குற்றஞ்சாட்டினார். 1982 நவம்பரில் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திராவைச் சந்தித்து முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பாக மனு ஒன்றைக் கொடுத்தனர். இனி காங்கிரஸ் கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதர முஸ்லிம் உறுப்பினர்களோடு சேர்ந்து வந்து மனு கொடுக்கக் கூடாது என (ஜன. 83) அடுத்த மாதமே உத்தரவிட்டார். இவரது ஆட்சியில்தான் மொரதாபாத், மீரட் போன்ற இடஙகளில் மதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்திலெல்லாம் பி.ஏ.சி. எனப்படும் புராவின்சியல் ஆயுதப் படைவெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு எதிராக இருந்ததை உச்சநீதிமன்றம் உட்பட பலரும் கண்டித்தபோது இந்திரா பி.ஏ.சியை ஆதரித்துப் பேசினார் (பி. 24, 83). தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தாங்கள் எத்துழையாமை இயக்கம் தொடங்கப் போவதாக முஸ்லிம்கள் அறிவித்தபோது (ஜன. 24, 83) அதனைக் கடுமையாய் எதிர்த்து, “எவ்வளவு அமைதியாய் நீங்கள் போராடினாலும் அது காங்கிரசுக்கு எதிரானதாகத்தான் பொருள்படும். நீங்கள் ஒத்துழைத்தால்தான் எங்களால் இந்து மதவெறியைக் கட்டுப்படுத்த முடியும்என்று மிரட்டினார் (பிப். 10, 83). 1985ம் ஆண்டின் தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்5(b) பிரிவின்படி பாதுகாக்கப்பட்ட இடங்களென்றாலும் வழிபடும் தலங்களானால் அதில் மக்கள் வழிபாடு செய்ய உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டில்லி சப்தர்ஜங் மசூதி உட்பட பல இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்கள் எனக் காரணம் காட்டப்பட்டு முஸ்லிம்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. ஜனதா ஆட்சிக்காலத்தில் இந்தச் சட்டப்பூர்வமான வழிபாட்டு உரிமை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது (மே, 1979). மீண்டும் இந்திரா ஆட்சியில் இவ்வுரிமை பறிக்கப்பட்டது (செப். 5, 83). ராஜீவ்காந்தி மிக வெளிப்படையாகவே இந்துமதச் சக்திகளுடன் கூட்டு வைத்துக் கொண்டதையும், ஆர்.எஸ்.எஸ். அவரை ஆதரித்ததையும் நாம் அறிவோம். ஒரு பக்கம் ஷா பானு வழக்கில் முஸ்லிம் மதவாதச் சக்திகளைத் திருப்திப்படுத்தச் சட்டம் இயற்றிக் கொண்டே பாபர் மசூதியில் ராம வழிபாடு செய்ய அனுமதியளித்து இன்றைய கொடுமைகளுக்கெல்லாம் காரணமான கதையை விளக்க வேண்டியதில்லை.

பெரும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் அடிக்கடி சங்கராச்சாரி போன்ற மதத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகளையும், ஆசிகளையும் பெறுவது, அதனைப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது என்பதெல்லாம் இந்திரா, ராஜீவ், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரின் காலத்தில் உச்சமடைந்தது. இந்த நடவடிக்கைகளோடு அரசு, இராணுவம் போன்றவற்றில் உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கத்தையும், அவற்றில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுதலையும் இணைத்துப் பார்த்தால் நமது அரசியல் இந்து மயமாகியிருப்பது விளங்கும். சமீபத்தில் காஞ்சி சங்கராச்சாரி நூற்றாண்டுவிழா கொண்டாடப் பட்டபோது நரசிம்மராவ் ஓடோடி வந்ததையும், அந்த விழாவிற்குத் தெலைக்காட்சி மற்றும் பார்ப்பனப் பத்திரிகைகள் அளித்த விளம்பரங்களையும் நினைத்துப் பாருங்கள். பா.ஜ.க. ஆட்சியில் சங்கராச்சாரியின் அரசியல் தலையீடுகள் பற்றி விளக்க வேண்டியதில்லை. மசூதி இடத்தில் கோயில் கட்டுகிற பிரச்சினையில் வாஜ்பேயி ஜெயேந்திரரை அழைத்துப் பேசுகிறார். ஜெயலலிதா அவர் இட்ட ஆணையை ஏற்று மதமாற்றத்தடைச் சட்டம் கொண்டு வருகிறார். அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்து மதக் கடவுள்களுக்குப் பூசை செய்வது, வேத மந்திரங்கள் ஓதுவது என்பதெல்லாம் இன்று வழக்கமாகிவிட்டன.

No comments: