Sunday, November 11, 2012

ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-04)

இஸ்லாமியர் பசுவதை செய்பவர்களல்லவா? மாட்டிறைச்சி தின்பது இழிவல்லவா?
ஆட்டிறைச்சி சாப்பிடும்போது மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறானது என்பதற்கு அறிவியல் ஆதாரம் எதுவுமில்லை. சொல்லப் போனால் ஆடடிறைச்சியைக் காட்டிலும் மாட்டிறைச்சியில் புரோட்டீன் முதலிய சத்துக்கள் அதிகம். பசு மாமிசத்தை முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்து மதத்திலேயே பல பிரிவினர், ஆங்கிலோ இந்தியர், தாழ்த்தப்பட்டவர் எனப் பலரும் சாப்பிடுகின்றனர். வெளிநாட்டவர் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவது மாட்டிறைச்சியைத்தான். வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் முழுவதிலும் பீஃப் பிரியாணி கிடைக்கும்என்கிற அறிவிப்புப் பலகைகளைப் பார்க்க முடியும்.

வரலாற்றில் மேய்ச்சல் மற்றும் வேட்டை வாழ்க்கையை மேற்கொள்ளும் சமூகங்கள் கால்நடை இறைச்சி உண்பது வழக்கம். வேதகாலத்தில் குதிரை, மாடு முதலியவற்றைப் பலியிட்டுத் தின்றுள்ளனர். உங்கள் பிள்ளைகள் அறிவுடையோராகவும், வேதமறிந்தவர்களாகவும், நீண்ட ஆயுளைப் பெற்றவராகவும் இருக்க வேண்டுமானால் நெய் சேர்த்த மாட்டுக் கறி சாப்பிடுங்கள்என்று பிருகதாரண்ய உபநிடதம் (6418) குறிப்பிடுகிறது. இதற்கு ஆதி சங்கராச்சாரி உரையும் எழுதியுள்ளார். விவசாயச் சமூகங்களில் கால்நடைகளின் தேவை இருந்ததால் மாட்டிறைச்சி சாப்பிடுவது இழிவானது என்கிற மதிப்பீடுகள் தோன்றின. இந்தியாவில் வேத மதத்திற்கு எதிராகத் தோன்றிய புத்த-சமண சமயங்கள் இதனை வலியுறுத்தின. எனவே பின்னாளைய பார்ப்பன மதமும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை இழிவாக்கியது. இன்று விவசாயத் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்டன. விவசாயத்தில் கால்நடைகளின் பங்கு குறைந்துவிட்டது. எனவே உலகெங்கிலும் பல முன்னேறிய சமூகங்களில் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது.

நாம் செய்வது எல்லாவற்றிற்கும் எதிராகச் செய்கிறார்களே இஸ்லாமியர். நாம் இறந்தவர்களை எரித்தால் அவர்கள் புதைக்கிறார்களே?
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பழக்கங்கள் உள்ளன. முஸ்லிம்கள் மட்டுமல்ல; அய்ரோப்பியர், அமெரிக்கர்,ரசியர் எனப் பலரும் புதைப்பதையே பழக்கமாக வைத்துள்ளனர். பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் கூடப் புதைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. மதத் தலைவர்கள் இறக்கும்போது எரிக்காமல் புதைத்து அதிஷ்டானம்கட்டி வழிபடுவது இந்து மதப் பழக்கம்தான். அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் கூட எரிப்பதைக் காட்டிலும் புதைப்பதுதான் சரியானது எனச் சுற்றுச் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பலதார மணம் புரிந்து கொள்வது குரானிலேலே அனுமதிக்கப்பட்டுள்ளதே?
எந்தச் சூழலில் பலதார மணம் குர் ஆனில் அனுமதிக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். இஸ்லாம் தோன்றிய காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள், மதப் பிரிவுகள் ஆகியவற்றின் எதிர்ப்புக் குள்ளானது. நிறைய போர்களைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் அதற்கிருந்தது. போர்களில் ஆண்கள் ஏராளமாகக் கொல்லப்பட்டதையடுத்துச் சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகியது. எடுத்துக்காட்டாக உகுத் என்னுமிடத்தில் நடைபெற்ற போரில் எழுபது ஆண்கள் கொல்லப்பட்டனர். அப்போது மொத்த சனத்தொகையே 700 பேர்கள்தான். இந்தச் சூழலில் சமூகச் சமநிலையைக் காப்பாற்றவும் விதவைகளுக்கு வாழ்க்கை தரவும் பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்தது.

அனாதைப் பெண்கள், விதவைகள் ஆகியோரைப் பற்றிப் பேசும்போதுதான் புனித குர் ஆன் (4:3) ஒரு ஆண் நான்கு மனைவியரை திருமணம் செய்து கொள்ளலாம் எனச் சொல்கிறது. அந்த நால்வரும் சமமாக வைத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

குர்-ஆன் இப்படி அனுமதித்துள்ளதால் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைத் திருமணம் செய்து கொண்டுள்ளனர் எனப் பொருளில்லை. புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம்களைக் காட்டிலும் இந்துக்கள்தான் அதிக அளவில் பலதார மணம் புரிபவர்களாக உள்ளனர் என்பது விளங்கும். இந்தியப் பெண்களின் நிலை பற்றி ஆராய அரசால் நியமிக்கப்பட்ட (1975) குழு ஒன்றின் முடிவு கீழே தரப்பட்டுள்ளது.
பலதார மணம்
(
எண்ணிக்கைகள் சதவீதங்களைக் குறிக்கின்றன)
ஆண்டுகள் இந்துக்கள் இஸ்லாமியர்
1931-41 6.79 7.29
1941-51 7.15 7.06
1951-61 5.06 4.31

1981
ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் கூடப் பலதார மணம் இந்துக்கள் மத்தியில் அதிகமாக உள்ளதை நிறுவியுள்ளது.இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள முஸ்லிம் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை 25 லட்சம் குறைவு. எனவே முஸ்லிம்கள் அனைவரும் நான்கு மனைவியரைக் கட்டிக் கொள்வது என்பதெல் லாம் நடைமுறைச் சாத்தியமில்லாத விசயங்கள்.
இஸ்லாமியர் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. எனவே அவர்கள் மத்தியில் மக்கள் தொகைப் பெருக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்களே?
இந்து மத வெறியர்கள் இந்தக் கருத்துக்கு ஆதரவாக 1981ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் காட்டுவார்கள். அதாவது முஸ்லிம்களின் எண்ணிக்கை 61 மில்லியனிலிருந்து 75 மில்லியனாகியிருக்கிறது (30.69 சத அதிகரிப்பு). ஆனால் அதே சமயத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 453 மில்லியனிலிருந்து 549 மில்லியனாக உயர்ந்துள்ளது. (24.14 சத அதிகரிப்பு). இந்தப் புள்ளி விவரத்தை மட்டும் பார்க்கும்போது அவர்கள் சொல்வது உண்மை போலத் தோன்றும். முழுமையாக இந்தப் பிரச்சினையை விளங்கிக் கொள்ள கீழேயுள்ள தகவலைப் பாருங்கள்.

மக்கள் தொகை வளர்ச்சி(எண்கள் சதவீதங்களைக் குறிக்கின்றன.)
ஆண்டுகள் இந்துக்கள் இஸ்லாமியர்
1961-71 23.69 30.84
1971-81 24.14 30.69

இதன்படி பார்த்தால் முதல் பத்தாண்டுகளைக் காட்டிலும் அடுத்த பத்தாண்டில் இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளது. ஆனால் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதமோ குறைந்துள்ளது.ஒன்றைப் புரிந்து கொள்வது நல்லது. மக்கள் தொகை வளர்ச்சி வீதம் என்பது மத உணர்வைப் பொறுத்ததல்ல. கல்வியறிவு, பொருளாதார வளர்ச்சி போன்ற இதர காரணிகளையே அது பொருத்திருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர் நிறுவியுள்ளனர்.

முஸ்லிம்கள் மத்தியில் கல்வி, பொருளாதார நிலைகள் என்பன இந்துக்களைக் காட்டிலும் குறைவு. முஸ்லிம்கள் மத்தியில் வறுமை இந்துக்களைக் காட்டிலும் 17 சதம் கூடுதல். பொதுவில் கல்வி வளர்ச்சி அதிகமாகும்போது குழந்தை பெறும் வீதம் குறைந்துவிடுகிறது. காஷ்மீரில் 75 சத முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் மொத்த சனந்தொகையில் முஸ்லிம்களின் வீதம் 5.21. மொத்தம் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களில் முஸ்லிம்களின் பங்கும் கிட்டத்தட்ட இதே அளவுதான் இருக்கிறது. எனவே முஸ்லிம் சனத் தொகை பெருகி வருகிறது என்பதும், இப்படியே போனால் அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடுவர் என்பதும்அப்பட்டமான பொய்கள்.
இஸ்லாமியர்க்கு மத உணர்வு அதிகமில்லையா? தேர்தல்களில் தங்கள் மத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தானே அவர்கள் வாக்களிக்கின்றனர்?
இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் வாக்களிக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரங்களில்லை. இடத்திற்கு இடமும், காலத்திற்குக் காலமும் முஸ்லிம்கள் வாக்களிக்கும் முறையும் வேறுபடுகிறது. பால் ஆர்.பிராஸ் என்பவர் கான்பூரை மையமாமக வைத்தும் பீட்டர் பி. மேயர் என்பவர் திருச்சி, ஜபல்பூர் ஆகிய நகரங்களை மையமாக வைத்தும் 1957, 1962 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் செய்த ஆய்வுகளின்படி முஸ்லிம்கள் மதவாத அடிப்படையில் வாக்களிப்பதில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. (எகனாமிக் அண்ட பொலிடிகர் வீக்லி ஆண்டுமலர், 1988). தேசியக் கட்சிகளுக்குத்தான் அவர்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்.

வகுப்புவாத இயக்கங்களாகத் தோற்றமளிப்பவைகட்கு அவர்கள் வாக்களிப்பதில்லை. 1952 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளில் 65.41 சதம் தேசியக் கட்சிகளுக்குத்தான் விழுந்தன. 1962ல் இது 75.2 சதமாக அதிகரித்தது. மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 12 சதம் பேர் முஸ்லிம்கள் இருந்தும்கூட முஸ்லிம் லீக் கட்சியால் 1957 தேர்தலில் பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு உறுப்பினரையும், 1962ல் இரண்டே இரண்டு உறுப்பினர்களையும் மட்டுமே அனுப்ப முடிந்தது. இதுவும் கூடக் கேரளத்திலிருநதுதான் சாத்தியமாயிற்று. கூட்டணி இல்லாமல் எங்குமே முஸ்லிம் லீக்கோனில்லை வேறெந்த முஸ்லிம் கட்சிகளோ வெற்றி பெற இயலாது என்பதுதான் உண்மைநிலை.

No comments: