Sunday, November 11, 2012

ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-08)


சமீபத்தில் மதக் கலவரங்களில் பொதுப்படையான பண்புகள் என ஏதாவது செல்ல முடியுமா?
சொல்லலாம். முதலில் இந்துவெறிப் பாசிச அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான முழக்கங்களை வெளிப்படையாக வைக்கின்றன. முஸ்லிமாக இருப்பதே தேசத்துரோகமாக காட்டப்படுகிறது. பாபரின் பிள்ளைகளே பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்’, ‘பாபர் மசூதியா மரணமா எது வேண்டும்சொல்என்றெல்லாம் முழங்கப்படுகிறது. அடுத்து, இப்போதெல்லாம் வகுப்புக் கலவரங்கள் என்றால் ஒரே இடத்தோடு முடிந்துவிடுவதில்லை. நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தப்படுகிறது- பாசிசச் சக்திகள் இதற்கேற்ற வலைப்பின்னலை நாடு முழுவதும் அமைத்துள்ளன. பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடெங்கும் பல இடங்களில் கலவரங்கள் நடந்ததை நினைத்துப் பாருங்கள். அப்புறம்,

வன்முறை என்பது ஒரே நாளில் முடிவடைந்து விடுவதில்லை. தொடர்ந்து சில நாட்கள் வரை புகைந்துகொண்டே இருக்கிறது. திடீர் திடீரென வன்முறை வெடிக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தோடு முஸ்லிம்கள் வாழவேண்டி யிருக்கிறது. நான்காவதாக, சிறுபான்மையினர் கொல்லப்படுவது என்பதோடு அவர்கள் பொருளாதாரப் பின்புலத்தையே அழித்துவிடும் நோக்கோடு அவர்களது கடைகள், சொத்துக்கள், நிறுவனங்கள் ஆகியவை அழித்தொழிக்கப்படுகின்றன. சமீபத்திய சூரத், ரோடா, பம்பாய்க் கலவரங்களில் இதை நீங்கள் பார்த்திருக்கலாம். கடைசியாக, இத்தகைய தாக்குதல்களின் கொடூரத்தன்மை மிகவும் அதிகரித்திருக்கிறது. நவீன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் முதலியவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியப் பொருளாதாரத்தில் இஸ்லாமியர் ஆதிக்கம் பற்றி ஏதும் சொல்ல முடியுமா?
சொல்லத்தக்க அளவில் எந்தத் தீர்மானகரமான பங்கையும் அவர்கள் வகிக்கவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் 50ல் ஒன்றுகூட முஸ்லிம்களுக்குச் சொந்தமானதல்ல. அதேசமயத்தில் கடைக் கோடியாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தாழ்த்தப்பட்டவர்களும் இஸ்லாமியருந்தான். 50 மில்லியன் ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்யப்பட்டுள்ள 2832 பெருந்தொழில் நிறுவனங்களில் நான்கே நான்குதான் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. (பார்க்க: எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, 3-11-90).
அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகள், வங்கிக் கடன்கள் முதலியவை எந்த அளவு இஸ்லாமியரைச் சென்றடைகின்றன?
குறைந்த வருமான, மற்றும் நடுத்தர வருமான வீட்டு ஒதுக்கீடுகளில் 2.86 சதம் மட்டுமே முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்றன. நியாய விலைக் கடை உரிமங்கள் பெற்றோரில் முஸ்லிம்கள் 6.9 சதம்தான். காதி மற்றும் கிராமப்புறத் தொழிற் குழுவின் நலத் திட்டங்களால் பயனடைந்தோரில் முஸ்லிம்கள்0.25 சதம் தான். இன்னொரு விவரம்:
அரசுக்கடன்கள்
தொகை ரூ. பயனடைந்த இஸ்லாமியர்
சதவீதக் கணக்கில்
50,000-1,00,000 3
1
லட்சம்-2 லட்சம் 2
2
லட்சம் 10 லட்சம் 1க்கும் குறைவு
(
பார்க்க: எகானமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, 3-11-90)
கல்வி நிலையில் இஸ்லாமியர் எப்படி உள்ளனர்?
ரொம்ப மோசம். சிறுபான்மைக் குழுவின் அறிக்கையின்படி பத்தாம்வகுப்பு வரை படித்தவர்களில் 4 சதம் மட்டும் முஸ்லிம்கள். உயர் கல்வியில் நிலைமை இன்னும் மோசம். மத்தியதர வர்க்கம் என்பது முஸ்லிம்கள் மத்தியில் உருவாகாமல் போனது இதற்கொரு காரணம். பெரும்பாலோர் ஏழைகள், கைவினைத் தொழில் செய்வோர் இப்படித்தான். உங்களுக்குத் தெரிந்து முஸ்லிம்கள் ஓரளவு வசதியாக உள்ள ஒருசில பகுதிகளை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் இதுதான் நிலை என்று கருதிவிடாதீர்கள்.
ஆனால் முஸ்லிம்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஏராளமாய்ப் பணம் வருகிறதே?
இந்திராகாந்தி அமெரிக்காவில் பேட்டி கொடுத்ததை வைத்துச் சொல்கிறீர்களா? எச்.என்.பகுகுணா இது பற்றிப் பாராளுமன்றத்தில் கேட்டபோது அரசால் (ஆக. 16, 1982) இது உடனே மறுக்கப்பட்டது. அதே ஆண்டு பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் (ஏப்ரல் 28, 82)ஒன்றிலிருந்து இன்னொரு தகவல். 1981-82ம் ஆண்டு வெளிநாட்டு உதவி பெற்ற இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 3159. இதில் முஸ்லிம் நிறுவனங்கள் 62 தான். அதாவது வெறும் இரண்டு சதம் தான்.

இன்னொன்றையும் சிந்தித்துப் பாருங்கள். இன்று ராமஜன்ம பூமி என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் வெளிநாடுகளிலிருந்து இந்து வெறி அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் பணம் வந்து குவிகிறது. சுருட்டியது போக எஞ்சியவற்றை வைத்துக் கொண்டு இன்று அயோத்தி முழுவதும் ஏராளமான பிரகாரங்களும், மாளிகைகளும் மிக ஆடம்பரமாய்க் கட்டப்படுகின்றன. இது தொடர்பாகக் கணக்கு கேட்ட ஒரு வருமான வரி அதிகாரி மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ள செய்தியை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனந்த் பட்டவர்த்தனின் கடவுளின் பெயரால்என்கிற தகவல் படத்தில் இந்த அதிகாரியின் பேட்டியையும் நீங்கள் பார்க்கலாம். உண்மை இப்படியிருக்க முஸ்லிம்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதிவருகிறது என்கிற செய்தி திட்டமிட்டு தொடர்ந்து பரப்பப்படுவது முஸ்லிம்களுக்கு திரான வன்முறைக்கு ஒரு காரணமாக அமைந்து விடுகிறது என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மொரதாபாத் கலவரத்திற்கு Ôடைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் அதன் ஆசிரியர் கிரிலால் ஜெயின் தொடர்ந்து இத்தகைய வதந்தி பரப்பி வந்ததை ஒரு காரணமாய்ப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த வகையில் வன்முறையில் தொடர்புச் சாதனங்களின் பங்கையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

குஜராத் வன்முறையை ஒட்டி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் உள்ள இந்து உயர்சாதியினர் இங்குள்ள இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக நிதி திரட்டுவது பற்றிய சர்ச்சை மேலுக்கு வந்தது.ராபர்ட் ஹாத்வே போன்ற அமெரிக்கக் கல்வியாளர்கள் இது போலத் திரட்டுப்படுகிற பணம் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் பயன்படுத்துவதைப் பற்றிக் குற்றஞ்சாட்டியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்புச் சாதனங்கள் எப்படி செயல்படுகின்றன.
முஸ்லிம்கள் பற்றிய கட்டுக் கதைகள் என இதுவரை நாம் என்னவெல்லாம் சொன்னோமோ அவ்வளவும் தொடர்புச் சாதனங்கள் வழியாய்த்தான் மக்கள் மத்தியில் பதிக்கப்படுகின்றன. இந்தி மொழிப் பத்திரிகைகள் இந்த வகையில் மிகவும் மோசம். பாபர் மசூதிப் பிரச்சினையில் ஸ்வதந்த்ர சேத்னா’, ;பயோனியர்’, ‘ஆஜ்’, ‘ஸ்வதந்த்ர பாரத்போன்ற பத்திரிகைகள் எப்படி முஸ்லிம்களுக்கு எதிரான பொய்யான வதந்திகளைப் பரப்பின என்பதை ராதிகா ராமசேஷன் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார் (எ.பொ.வீ. 15-1-90). முலாயம்சிங் யாதவ் இந்த வெறியர்களுக்கு ஆதரவாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை முல்லா முலாயம்என்றே இப்பத்திரிகைகள் எழுதின. முலாயம் இஸ்லாமியரை ஆயுதம்வைத்துக் கொள்ளச் சொல்கிறார்எனவும், “முலாயம் ஆட்சியில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்எனவும் இவை பொய்ச் செய்திகளை வெளியிட்டன.

பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனையில் இங்குள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எப்படி நடந்துகொண்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்து மதவெறி அமைப்புகள் தடை செய்ய்யப்பட்டதைத் தினமணிகண்டித்து எழுதியது (டிசம். 12). பெரும்பான்மையினரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் முஸ்லிம்களின் கதி இப்படித்தான் ஆகும்என்கிற கருத்தில் மசூதி இடிப்பைத் தொடர்ந்து வீரேந்திர கபூர் என்பவரின் கட்டுரையை இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (ஜன. 7,93) வெளியிட்டது. பார்ப்பனர் ஆதிக்கத்திலுள்ள தொலைக்காட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.மசூதி இடிப்பிற்கு ஆதரவாக மக்களைத் திரட்டிய பாசிச அமைப்புகளின் முயற்சிக்குப் பின்னணியாக விளங்கியது தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்ட இராமாயண, மகாபாரதங்கள்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதே பத்திரிகைகள்தான் ஆண்டுக்கு ஒரு முறை ரம்ஜான் மலர் வெளியிட்டு முஸ்லிம்வணிகர்களிடம் விளம்பரக் கொள்ளை அடிப்பதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.
தொலைக்காட்சியில் திப்புசுல்தான் கதையைக் கூடத்தான் தொடராகக் காட்டினார்கள்?
ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். ஒவ்வொரு வாரமும் திப்பு சுல்தான் தொடருக்கு முன்பாக இது கற்பனைக் கதையின் அடிப்படையிலானதுஎன்று அறிவிப்புச் செய்தார்கள். திப்பு சுமார் இருநூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்து மடிந்த சரித்திர நாயகர்.அவருடைய கதைக்கு இந்த அறிவிப்பு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சாணக்கியன் கதைக்கும் இராமாயண, மகாபாரதங்களுக்கும் இந்த அறிவிப்பு கிடையாது.
திரைப்படங்களில் கூட முஸ்லிம்கள் பற்றி ஒரேவிதமான பிம்பங்கள்தான் முன் நிறுத்தப்படுகின்றன. நல்லமுஸ்லிம் என்றால் இந்துக்களோடு அனுசரித்துப் போகிறவர், உதவி செய்கிறவர், உரிமைகளுக்காகப் போராடினால் அவர் நல்ல முஸ்லிமல்ல. ரோஜா’, ‘ஜாதிமல்லி’, ‘பம்பாய்முதல் நேற்று வந்த ஒற்றன்’, ‘நரசிம்மாவரை சமீபத்திய திரைப்படங்களில் முஸ்லிம்கள் வன்முறையாளர்களாகச் சித்திரிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ரோஜாதிரைப்படம் பற்றிச் சொன்னீர்கள். சரி, ‘ஜாதிமல்லியில் பொதுவாக மதக் கலவரம் கண்டிக்கப்படுகிறதே தவிர எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் விதண்டவாதம் செய்வது போலத் தோன்றுகிறதே?
பாலச்சந்தர் போன்ற பார்ப்பனர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் நம் காதுகளில் ஜாதிமல்லியைச் சுற்றிவிட்டுப் போய்விடுவார்கள். அந்தப் படத்தில் இரண்டு முறை மதக்கலவரங்கள் காட்டப்படுகின்றன. இரண்டுமே நடப்பது அய்தராபாத்தில்தான், இன்று மதக் கலவரங்கள் அயோத்தியிலும், பம்பாயிலும், மீரட்டிலும், டில்லியிலும் நடக்கின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாலச்சந்தர் ஏன் அய்தராபாத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அய்தராபாத் என்பதன் மூலம் வன்முறையாளர்கள் முஸ்லிம்கள் என்கிற கருத்து மறைமுகமாய்ச் சொல்லப்படுகிறது. தவிரவும் பாதிக்கப்படுபவள் ஒரு இந்துப் பாடகி. பெயர் ஸ்ரீ ரஞ்சனி. எனவே மதக் கலவரத்தில் அவளது தாயைக் கொல்பவர்கள் முஸ்லிம்களாகத்தான் இருக்க முடியும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எங்களைப் போன்றவர்களின் வாதங்களை விதண்டாவாதம் எனச் சொல்லாதீர்கள். சமத்துவம், சனநாயகம் என்கிற அடிப்படையில் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் நாங்கள். அறிவுரீதியாக நாங்கள் சொல்கிற விஷயங்கள் தவறானவை என்று நிறுவுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம்.
நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் பெரும்பான்மையோரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதுதானே சனநாயகம்?
பெருமபான்மையானவர்களின் கருத்துக்கும் பெரும்பான்மை சார்பாகச் சொல்லப்படும் கருத்துக்கும் வேறுபாடு காணவேண்டும். இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான மக்கள் பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்றா சொல்கின்றனர்? நிச்சயமாகக் கிடையாது. தொடர்புச் சாதனங்கள் பற்றிய ஆய்வு மையம்என்கிற அமைப்பு டிசம்பர் 8ம் தேதியன்றும், ‘டைம்ஸ் ஆப் இந்தியாஇதழ் டிசம்பர் 12, 15 (1992) ஆகிய தேசிதளிலும் செய்த கருத்துக் கணிப்பின்படி 80 சதம் பேர் மசூதி இடித்ததைக் கண்டித்துள்ளனர். அதோடு பொத்தாம் பொதுவாகப் பெரும்பான்மையோரின் கருத்துகளை ஏற்றுக் கொள்வதுதான் சனநாயகம் என்றும் சொல்ல முடியாது. மனித உரிமைப் பிரச்சினைகளைப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானித்துவிடவும் முடியாது. நாளைக்கே இந்து மதவெறி அடிப்படையில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் யாரும் பிள்ளை பெறக்கூடாது என்றொரு சட்டம் போட்டால் பெரும்பான்மைக் கருத்து என ஏற்றுக் கொள்ள முடியுமா? வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் அப்படித்தான்.

அதோடு சனநாயகம் என்றால் சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கட்டுப்படுவது மட்டுமல்ல; சிறுபான்மையோருக்குப் பாதுகாப்பளிப்பதும், தங்களது கருத்துக்களை அவர்கள் பிரச்சாரம் செய்து பெரும்பான்மைக் கருத்தாக மாற்ற உரிமையளிப்பதும் சேர்த்துத்தான் சனநாயகம். ஆனால் ஒரு எச்சரிக்கையை இங்கு சொல்வது பொருத்தம். சாதாரண மனிதனிடமும் இந்துத்துவச் சிந்தனைகளைப் பதிப்பதில் ஆர்.எஸ்.எஸ்.,பா.ஜ.க. கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு இணையாக நமது மதச்சார்பற்ற சக்திகள் வேலை செய்வதில்லை, அணிதிரட்டுவதில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. சமீபத்திய தேர்தல்களில் (2003) பா.ஜ.க. வெற்றி பெற்றதற்குப் பின்னணியாக உள்ள இந்துத்துவக் கும்பலின் தொடர்ச்சியான செயற்பாடுகளை நாம் மறந்துவிடக் கூடாது. குறிப்பாகப் பழங்குடியினர், தலித்கள் மத்தியில் இவர்களின் செயல்பாடு கவனிக்கத்தக்கது.

No comments: