Sunday, November 11, 2012

ஏன் ஹிந்துத்து​வாவாதிகள் முஸ்லிம்களை வெறுக்கின்​றனர்? (Part-10)


சரி. மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு வருவோம். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதமாற்றம் அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் அது தேவைதானே?
இந்து மதத்திலிருந்து ஏன் மக்கள் வெளியேற நேர்கிறது என்பதைப் பற்றிச் சிந்திப்பதற்கு இந்துத்துவவாதிகளுக்கு நேர்மையும் தைரியமும் இல்லை. இங்குள்ள சாதிக் கொடுமை,தீண்டாமை ஆகியவற்றின் விளைவாகவே மக்கள் மதம் மாற நேர்கிறது. இன்றுவரை அவற்றை ஒழிப்பதற்கான காத்திரமான முயற்சிகள் எதையும் சங்கராச்சாரியோ யாருமோ மேற்கொள்ள வில்லை. சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே உள்ள கூத்திரம்பாக்கம் கிராமத்திலுள்ள தலித் மக்கள் தமது வீதிக்குச் சாமி ஊர்வலம் வேண்டும் எனப் போராடிய கதையைப் பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். பலமுறை போராடி,இறுதியில் தமது கோரிக்கைக்குத் தீர்வில்லை எனில் தாம் மதம் மாறப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோருடன் சங்கராச்சாரியும் ஓடோடி வந்தார். நீங்கள் சுத்தமாக இல்லை. உங்கள் தெருவுக்கு ஊர்வலம் வராதுஎன்றுதான் சங்கராச்சாரி சொன்னாரே ஒழிய ஊர்வலம் வருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மதம் மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டுமென்றார். மத மாற்றச் சட்டமும் அறிவிக்கப்பட்டது. இன்று அங்கே தலித் மக்கள் தாக்கப்பட்டுள்னர். வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். சங்கராச்சாரி இப்போது அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தம்மிடம் இருந்த ஒரே ஆயுதமாகிய மதமாற்றம்என்பதையும் இழந்ததால் இன்று பேச இயலாமல் அந்த தலித் மக்கள் ஊமையாகிப் போயுள்ளனர். இன்றும் அவர்களின் வீதிக்குச் சாமி வந்தபாடில்லை. ஒரு சோற்றுப் பதமாக இந்த உதாரணம். எல்லா இடங்களிலும் இதே கதைதான்.

இந்திய அளவில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர ஏற்கனவே இரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1955ல் கொண்டுவரப்பட்டற மசோதாவைப் பாராளுமன்றம் நிராகரித்தது. 1978 ஜனதா ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற ஒரு மசோதாவை கொண்டுவர ஜனசங்கத்தினர் தீவிரமாக முயற்சித்தனர். அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அதை ஏற்கவில்லை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதம் பரப்பும் உரிமையை நீக்குவதற்கு இதுவரை பாராளுமன்றம் துணியவில்லை.

மதம் மாற்றுவதற்காக முஸ்லிம்களுக்குப் பெரிய அளவில் வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றொரு பொய்ப் பிரச்சாரத்தை இந்துத்துவவாதிகள் செய்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்து. மீனாட்சிபுர மதமாற்றத்தின் போதே இப்படிச் சொல்லப்பட்டது. இந்திய அரசின் நேரடி விசாரணையில் இது பொய் என்பது வெளிவந்தது. அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையே இதை ஏற்றுக் கொண்டுள்ளது.

கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில் அவர்களது எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருவதுதான் உண்மை. இந்தியக் கிறிஸ்தவம் அமெரிக்கக் கிறிஸ்தவத்தைக் காட்டிலும் பழமையானது. கிறிஸ்துவின் சீடர் தாமஸ் மேற்குக் கடற்கரை வழியாக இங்கு வந்தபோது மயிலாப்பூர் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டார் என்றொரு கதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் மயிலாப்பூர் சாந்தோம் மாதா கோயிலில் தாமசுக்கு ஒரு கல்லறை உண்டு. கிறிஸ்தவம் இத்தனை பழமையானதாயினும் இன்றும் கூட அவர்கள் மொத்த இந்திய சனத்தொகையில் இரண்டரை சதத்துக்கும் குறைவாகவே உள்ளனர். அதுவும்கூட படிப்படியாகக் குறைந்து வருவதை மக்கள் தொகைக் கணக்கீடுகள் நிறுவியுள்ளன. 1971ல் 2.60 சதமாக இருந்த கிறிஸ்தவ மக்கள் தொகை 1989ல் 2.45 சதமாகவும் 1991ல் 2.32 சதமாகவும் குறைந்துள்ளது.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்துத்துவ வாதிகள் வனவாசி கல்யாண் மஞ்ச்போன்ற அமைப்புகள் மூலம் பெரிய அளவில் கிறிஸ்தவப் பழங்குடியினரையும் தலித்துகளையும் இந்துக்களாக மாற்றி வருகின்றனர். இதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அவர்கள் ஆண்டுதோறும் செலவிடுகின்றனர். கிறிஸ்தவ தலித்துகளுக்கு தலித்கள் என்கிற அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது அரசியல் சட்டத்தில் இழைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் அநீதி. இதை வைத்துக் கொண்டு கிறிஸ்தவ தலித்துகளை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் இந்துவாக மதம் மாற்றி வருகின்றனர்.

கிறிஸ்தவ தலித்துகளுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பது அரசியல் சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதமாற்றத் தடைச் சட்டமாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். தவிரவும் நமது அரசியல் சட்டத்தில் மதம் பரப்பும் உரிமை என்பது பிற அடிப்படை உரிமைகளைப் போல நிபந்தனையற்ற உரிமையாக இல்லை. பொது அமைதிக்குக் குந்தகம் வராத அளவில்மதம் பரப்பலாம் என்றே உள்ளது. பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுகிறது என்கிற அடிப்படையில்தான் மாநிலங்கள் இத்தகைய சட்டங்களை இயற்றி வருகின்றன. இது போன்ற காரணங்களால்தான் அம்பேத்கரும், பெரியாரும் நமது அரசியல் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர்.
மதமாற்றத்திற்குப் பெயர் மாற்றம் ஒரு ஈடாகுமா?
அம்பேத்கரோ, பெரியாரோ அப்படிச் சொல்லவில்லை. மதமாற்றம் என்பது குழந்தை விளையாட்டல்ல. மனித வாழ்வை எவ்வாறு வெற்றிகரமாக்குவது என்பதோடு தொடர்புடையது அது. தீண்டாமை இழிவிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி இந்து மத விலங்குகளை உடைத்தெறிவதே. சாதியத்தையும் தீண்டாமையையும் ஒழிக்க ஒரே வழி மதமாற்றம்என்று அம்பேத்கர் கூறியுள்ளார். பெரியாரும் அதையே வற்புறுத்தியுள்ளார். இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே நன்மருந்துஎன்பது அவர் கூற்று. இன்று பெரிய அளவில் பெயர் மாற்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கூட பெயர் மாற்றம் என்பதை மதமாற்றத்திற்கு ஒரு மாற்றாகச் சொல்லவில்லை (பார்க்க சமரசம், சனவரி 2004).இந்து மத எதிர்ப்பின் அடையாளமாகவே அதைச் செய்வதாகச் சொல்கிறார். தவிரவும் மதமாற்றத்தால் விடுதலை உண்டா இல்லையா என்பதல்ல பிரச்சினை. மதமாற்றம் என்பதும் ஒருவரது மதத்திற்கு மற்றொருவரை அழைப்பதும் ஒருவரது பிறப்புரிமை. இதில் தலையிட அரசுக்கு என்ன உரிமை என்பதே நமது கேள்வி.
முஸ்லிம்களுக்குத் தமிழ்ப் பற்று இல்லை. ஓதுவதைக் கூட அவர்கள் அரபியில்தான் செய்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு உள்ளதே?
அபத்தம். நமது தமிழ்ப்பற்றாளர்கள் கூட அப்படி ஏதும் சொல்லியதாகத் தெரியவில்லை. அப்படி சொன்னால் அது அவர்களுக்குள் ஒளிந்துள்ள இந்துத்துவ மனத்தின் வெளிப்பாடாகவே இருக்க முடீயும். குரானைத் தமிழில் பெயர்த்துள்ளது தவிர ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் அது தமிழ் மக்களால் வாங்கி வாசிக்கப்படுகிறது. இஸ்லாமியர் ஆற்றிய தமிழ்த் தொண்டு குறித்து அறிஞர் உவைஸ் எழுதிய நூல் ஆறு தொகுதிகளாக மதுரைக் காமராசர் பல்லைக் கழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மசூதியில் நடைபெறுகிற தொழுகையில் பெரும்பாலானவைத் தமிழில் தான் நடைபெறுகின்றன. தொழுகை அழைப்பு என்பது உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களுக்குமான ஒரு பொதுவான அழைப்பு. ஒரு தனித்துவ அடையாளம். அது தவிர அவர்களது அனைத்து நடைமுறைகளும் தமிழில் தான் உள்ளன. திருமண ஒப்பந்தத்திலும் கூடப் பாருங்கள். சபையில் தமிழில்தான் கேள்விகள், சம்மதம் முதலியவை கேட்கப்படுகின்றன. பதிலும் தரப்படுகின்றன. இதை எல்லாம் பார்க்காமல் தொழுகை அழைப்பையும் கூடத் தமிழில்தான் செய்ய வேண்டும் என வற்புறுத்தவது எப்படிச் சரியாக இருக்கும்?

நமது நிகழ்வுகளில் தலித்கள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரை எந்த அளவிற்கு இடம் பெறச் செய்திருக்கிறோம் என்கிற கேள்வியை நாம் எல்லோரும் கேட்டுக் கொள்வது நல்லது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் நடைபெற்ற ஒரு தமிழ் வணிகர் மாநாட்டில்ஒரு முஸ்லிம் வணிகர் கூட அழைக்கப்படாதது என் நினைவுக்கு வருகிறது.இத்தகைய போக்குகளை மதச்சார்பற்ற, சனநாயக, இடதுசாரி சக்திகள் தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால் தலித்துகள், சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்து அக்கறையோடு பிரத்தியோகமாக மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், கோரிக்கைகள் முதலியவற்றை வைக்க வேண்டும். முஸ்லிம்கள் நடத்தக்கூடிய மாநாடுகள், பத்திரிகைகளில் முழங்குவதோடு நிறுத்திவிடக் கூடாது.
நன்றி :
அ.மார்க்ஸ்
amarx.org

No comments: